திண்டுக்கல், நவ. 15: திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளது என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக அரசு காலி பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் வேலைநாடுநர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விரைவில் துவங்கப்படவுள்ளது. இப்பயிற்சியானது திறன்மிக்க வல்லுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. மேலும் மாதிரி தேர்வுகளும் இலவசமாக நடத்தப்பட உள்ளன. எனவே, போட்டி தேர்விற்கு தயாராகும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். அவ்வாறு விருப்பமுள்ளவர்கள் இவ்வலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது விபரங்களை பதிவு செய்து வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
