செம்பட்டி அருகே ஆட்டோ மீது பஸ் மோதி இளம்பெண் பலி: பெற்றோர் உள்பட 3 பேர் படுகாயம்
நிலக்கோட்டை, ஆக. 8: வத்தலக்குண்டு பெத்தானியபுரத்தை சேர்ந்த மலைச்சாமி மனைவி ராஜலட்சுமி (29). இவர், உடல்நலம் சரியில்லாததால் சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனைக்கு தந்தை ராமன், தாய் கருப்பாயியுடன் ஆட்டோவில் நேற்று காலை புறப்பட்டு சென்றார். ஆட்டோவை ஜெயராம் (27) ஓட்டி வந்தார். வத்தலக்குண்டு சாலையில் செம்பட்டி அடுத்த பாளையங்கோட்டை பிரிவு அருகே வந்த போது எதிரே திண்டுக்கலில் இருந்து குமுளி சென்ற அரசு பஸ் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது பெற்றோர், டிரைவர் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செம்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் திண்டுக்கல்லை சேர்ந்த நாராயணசாமியிடம் (44) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.