திண்டுக்கல்லில் விசிக மாவட்ட செயற்குழு கூட்டம்
திண்டுக்கல், ஆக. 8: திண்டுக்கல்லில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மைதீன் பாவா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் தமிழரசன், திருவளவன் தமிழ் முகம் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முதன்மை செயலாளர் பாவரசு கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில், தமிழகத்தில் தொடர்ந்து நடக்கும் சாதி ரீதியான ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள் இதற்கென தனி சட்டம் இயற்ற வேண்டும்.
ஆணவ கொலையை கண்டித்து திண்டுக்கல்லில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொள்ள வேண்டும். கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு முகாம்கள் நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மண்டல துணை செயலாளர் அன்பரசு, மாநில துணை செயலாளர்கள் திருசித்தன், மணிகண்டன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜான்சன் கிறிஸ்டோபர், மாவட்ட துணை செயலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.