திண்டுக்கல், நவ. 4: அண்ணா பதக்கம் பெற தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: குடியரசு தின விழாவின் போது வழங்கப்படும் குடிமக்கள் மற்றும் சீருடைப் பணியாளர்களின் வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கத்திற்கு தகுதியான நபர்கள் டிச.15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அண்ணா பதக்க விருதிற்கு விண்ணப்பம் செய்வதற்கு அரசு விருதுகளுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://awards.tn.gov.in அலுவலக உள்நுழைவு மூலமாக விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும். இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பணியாளரின் தனிப்பட்ட விபரங்கள், சேவை விவரங்கள் மற்றும் சாதனைகளைத் துல்லியமாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.
பணியாளரின் சிறந்த சேவைக்கான சான்றுகள், நற்சான்றிதழ்கள், புகைப்படம் மற்றும் ஊடகச் செய்திகள் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அலுவலகத் தலைவரால் கையொப்பமிடப்பட்ட பரிந்துரைக் கடிதம் மற்றும் தடையின்மைச் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். இணையதளத்தில் விண்ணப்பித்த பின், அதன் பதிவிறக்கம் செய்யப்பட்ட நகல் மற்றும் சான்றளிக்கப்பட்ட ஆவணங்களை கலெக்டர் அலுவலகத்திற்கு அஞ்சல் அல்லது நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


