நிலக்கோட்டை, நவ.4: நிலக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரங்களில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நிலக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்த நிலையில் உள்ளது.
சிறிய பெட்டிக்கடை, மீன், சிக்கன் கடை போன்ற அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இந்த பிளாஸ்டிக் பைகள் அனைத்தும் தெருக்களில் வீசி செல்வதால், காற்று காரணமாக பல்வேறு பகுதிகளில் இடம் பெயர்ந்து மண்ணில் மக்கி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு, ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் பிளாஸ்டிக் பொருட்களில் ஒட்டியுள்ள உணவுகளை சாப்பிடும் போது, அவை வயிற்றுக்குள் சென்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
அனைத்து துறைகளின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், அடிக்கடி சோதனை நடத்தி, அபராதம் விதிக்கப்பட்டாலும் ஆபத்தை விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. எனவே, பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் அகற்ற வேண்டும். இதன் பயன்பாடு குறித்தான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி, பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


