திண்டுக்கல் மாவட்டத்தில் விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை; போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை
திண்டுக்கல், நவ. 3: திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் மீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது: பொதுமக்களின் பாதுகாப்பினை முதன்மைப்படுத்தும் வகையில், சாலை பாதுகாப்பு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி, தலைக்கவசம் அணியாமல் டூவீலர் இயக்குபவர்களின் ஓட்டுநர் உரிமத்தின் மீது மூன்று மாத தற்காலிக தடையுடன் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். மது குடித்து விட்டு வாகனத்தினை இயக்குதல், சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தினை இயக்குதல், செல்போன் பயன்படுத்தி கொண்டே வாகனத்தினை இயக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர்களின் ஓட்டுநர் உரிமங்களின் மீது தற்காலிக தடையுடன், அசல் ஓட்டுநர் உரிமமும் பறிமுதல் செய்யப்படும்.
ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட பயணிகளுக்கு மேல் கூடுதல் நபர்களை ஏற்ற கூடாது. தவறும் பட்சத்தில் வாகனம் சிறைபிடிக்கப்பட்டு, அனுமதி சீட்டும் ரத்து செய்யப்படும். மினி பஸ்கள் மற்றும் பஸ்கள் இயக்குபவர்கள் தங்களது வாகனங்களின் படிக்கட்டுகளில் பொதுமக்கள், குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயணம் செய்வதை அனுமதிக்க கூடாது. தவறும்பட்சத்தில், பஸ்சின் முதன்மை அனுமதி சீட்டின் மீது தற்காலிக தடை நடவடிக்கை மேற்கொள்வதுடன் வாகனமும் சிறைபிடிக்கப்படும். பள்ளி வாகனங்களின் ஓட்டுனர்கள் நிர்ணயிக்கப்பட்ட வேக அளவிலேயே அவற்றை இயக்க வேண்டும். அதிவேகமாக இயக்குவோரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிக தடை செய்யப்படுவதுடன், பள்ளி வாகனத்தின் அனுமதி சீட்டும் ரத்து செய்யப்பட்டு சிறைபிடிக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.


