பழநி, நவ. 3: ஐயப்ப பக்தர்கள் சீசன் நெருங்குவதன் காரணமாக பழநி நகரில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டுமென போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பழநி கோயிலில் விரைவில் ஐயப்ப பக்தர்களின் சீசன் துவங்க உள்ளது. இவர்களிடம் வியாபாரம் செய்வதற்காக வியாபாரிகளும் அதிகளவு பழநி நகரில் குவிய துவங்கி உள்ளனர். இவர்கள் பழநி புறநகர் சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலையோரங்களில் டெண்ட் அடித்து தங்கி உள்ளனர். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழநி நகர் மற்றும் புறநகர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பழநியை சேர்ந்த முருக பக்தர் திருமலைசாமி கூறியதாவது: கிரிவீதி முழுவதும் காண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளது. இவை சரியாக இயங்குகிறதா என்பதை ஆராய வேண்டும். பழநி புறநகர் பகுதிகளில் தங்கி இருக்கும் வெளிமாநில வியாபாரிகளின் ஆதார் எண், கைரேகை மற்றும் முகவரிகளை பெற்று சம்மந்தப்பட்ட ஊர்களில் அவர்கள் மீது குற்ற சம்பவங்கள் ஏதும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும். இரவு நேரங்களில் வெளிமாநில வியாபாரிகள் தேவையின்றி சுற்றி திரிவதை தடுக்க வேண்டும். மேலும், பழநி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். பிரத்யேக தனிப்படை அமைத்து சீசன் முடியும் வரை 24 மணிநேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.


