Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வடமதுரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகும் விஷ ஜந்துகள்: காம்பவுண்ட் சுவர் கட்டி தர கோரிக்கை

வடமதுரை, ஜூன் 2: வடமதுரையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் விஷ ஜந்துகள் புகுவதை தடுக்க காம்பவுண்ட் சுவர் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வடமதுரை அருகே பிலாத்து கிராமத்தில் இருந்து கொம்பேறிபட்டி செல்லும் சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சை பெற வடமதுரை சுற்றியுள்ள பிலாத்து, கொம்பேறிபட்டி, பாகாநத்தம், மலைப்பட்டி, மாமானியூர், காடையனூர், வாலி செட்டிபட்டி, ராமபுரம், தென்னம்பட்டி, ஊத்துப்பட்டி, பாரதிபுரம், கல்குளம், ஆண்டிகுளம், ஆண்டிபட்டி, ஒத்தப்பட்டி, தோப்புப்பட்டி, விராலிகாடு ஆகிய கிராமங்களில் இருந்து தினமும் அதிகமான கிராமப்புற மக்கள் வருகின்றனர்.

இந்த சுகாதார நிலையத்தின் முன்புறம் நீண்ட நாட்களாக காம்பவுண்ட் சுவர் பாதி கட்டப்படாமல் உள்ளது. அந்த இடத்தில் நாணல் தட்டை புதர் போல் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் அருகில் உள்ள ஆறு மற்றும் தோட்டங்களில் இருந்து பாம்பு, பூரான் போன்ற விஷஜந்துகள் உள்ளே எளிதாக வருகிறது. இதனால் நோயாளிகள் மட்டுமின்றி பணிக்கு வரும் டாக்டர்கள், செவிலியர்களும் அச்சப்படும் நிலை உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: வடமதுரை சுற்றுவட்டாரத்தில் பல கிராமங்களுக்கு இந்த ஒரு சுகாதார நிலையம்தான் மருத்து சேவை வழங்கி வருகிறது. இந்த சுகாதார நிலையத்தின் முன் பகுதியில் காம்பவுண்ட் சுவர் நீண்ட நாட்களாக கட்டப்படாமல் அப்படியே விட்டு உள்ளதால் திறந்த வெளியாக உள்ளது.

இதனால் மழைக்காலத்தில் அதிக வெள்ளம் வரும் போது மழைநீர் காம்பவுண்ட் சுவர் இல்லாத இடத்தின் வழியாக மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்து அதன்பின் ஆற்றுக்குள் மழைநீர் செல்லும். மேலும் இந்த காம்பவுண்ட் சுவர் இல்லாத இடத்திற்கு நேராக மேற்கு புறம் பிரசவ வார்டும், சித்த வைத்திய மருத்துவ பிரிவும் செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் செவிலியர்கள் தங்கும் அறையும் உள்ளது. காம்பவுண்ட் சுவர் இல்லாத இடத்தில் நாணல் தட்டை புதர் போல் வளர்ந்து காடு போல் உள்ளது. இதனால் இந்த வழியாக அருகில் உள்ள ஆறு மற்றும் தோட்டங்களில் இருந்து பாம்பு, பூரான் போன்ற விஷஜந்துகள் எப்போது வரும் என்ற அச்சத்திலேயே நோயாளிகள், டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளனர்.

இங்கு உள்ள பிரசவ வார்டில் பல நேரங்களில் பாம்பு வந்தது உண்டு. எனவே பிரசவ வார்டில் உள் நோயாளியாக இருக்கும் தாய்மார்களுக்கு பாம்புகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற ஒரு வித அச்சம் உள்ளது. மேலும் சுகாதார நிலையத்தின் முன்புறம் திறந்த நிலையில் கழிவுநீர் செல்வதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே மாவட் நிர்வாகம் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்புறம் காடு போல் வளர்ந்துள்ள நாணல் தட்டை புதர்களை அகற்றி அந்த இடத்தில் புதியதாக காம்பவுண்ட் சுவர் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.