Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பேரிஜம் ஏரிப்பகுதியில் புலிகள் நடமாட்டம்; வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்த லாரி டிரைவர் உட்பட 3 பேருக்கு அபராதம்: வனத்துறையினர் நடவடிக்கை

கொடைக்கானல், ஆக.29: கொடைக்கானலில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் ஒன்றாக பேரிஜம் வனப்பகுதி உள்ளது. சுற்றுலாத்தலமான இப்பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, புலிகள் சாலையில் உலா வந்ததை சுற்றுலா பயணிகள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதையடுத்து சுற்றுலாப்பயணிகள் பேரிஜம் ஏரிக்கு செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். பேரிஜம் ஏரி வனப்பகுதியில் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அந்நிய மரங்கள் வெட்டப்பட்டு, தினந்தோறும் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், பேரிஜம் ஏரி வனப்பகுதியில் இருந்து மரங்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. அப்போது சாலையில், புலிகள் நடந்து செல்வதைப் பார்த்த ஓட்டுநர், தடை செய்யப்பட்ட ஏர் ஹாரனை அடிக்க புலிகள் பயந்து ஓட்டம் பிடித்ததை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் லாரி ஓட்டுநர் ஆனந்தராஜ், அருண் செல்வம், ஞானபிரகாசம் ஆகிய மூவருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, வன உயிரின பாதுகாப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் இது போன்று வனவிலங்குகளை படம் பிடித்து பதிவேற்றம் செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.