வடமதுரை, ஆக.29: வடமதுரை அருகே தென்னம்பட்டியில் நால்ரோடு சந்திப்பு உள்ளது. இங்கு ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளதால் அதிகளவு மக்கள் வந்து செல்லக்கூடிய இடமாக உள்ளது. நால்ரோடு அருகே வரட்டாறு ஓடுகிறது. இங்கு நாணல் தட்டைகள் வளர்ந்து புதர்காடு போல் வளர்ந்துள்ளது. ஆற்றின் கரை அருகே உள்ள காலி இடத்தில் வேன்கள் நிறுத்துமிடம், தனியார் துவக்க பள்ளி, வீடுகள், விவசாய தோட்டம் உள்ளன. இந்நிலையில் நேற்று மாலை இங்குள்ள புதர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் வைத்த தீ, அப்பகுதியில் பரவி பற்றி எரிந்தது.
இது குறித்து அருகில் இருந்த பொதுமக்கள் வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதனை தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.



