பட்டிவீரன்பட்டி, ஆக.26: பட்டிவீரன்பட்டி அருக, சாலை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சையிலிருந்த மாணவரும் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவரின் மகன் குரு விஷ்ணு (17). பட்டிவீரன்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இதே ஊரைச் சேர்ந்த ஜோதிமணி என்பவரின் மகன் கமலேஷ் (16). சித்தரேவிலுள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். நண்பர்களான இருவரும், கடந்த 20ம் தேதியன்று டூவீலரில், சித்தரேவு-பெரும்பாறை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக டூவீலர், கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே இருந்த பெயர் பலகையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக இருவரும் மீட்கப்பட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் குருவிஷ்ணு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த கமலேஷ் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.



