Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் நில அளவையர் இல்லாமல் பணிகள் தேக்கம்: பொதுமக்கள் கடும் அவதி

ஒட்டன்சத்திரம், ஜூன் 26: ஒட்டன்சத்திரம் நகராட்சியில் நகர நில அளவையர் பணியிடம் காலியாக இருப்பதால் நில அளவை, சொத்து வரி திருத்தம், புதிய கட்டிட அனுமதி உள்ளிட்ட பல்வேறு நிர்வாக பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஒட்டன்சத்திரம் நகராட்சி எல்லைக்குள் பல பகுதிகள் விரிவடைந்து புதிய குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் கட்டிடங்கள் உருவாகி வருகின்றன. ஆனால் இன்னும் கிராம கணக்கிலிருந்தே செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவை நகரக் கணக்கிற்கு முழுமையாக மாற்றப்படாததால் நிலம் தொடர்பான ஆவண சரிபார்ப்பு, எல்லை நிர்ணயம், வரி விதிப்பு உள்ளிட்ட பணிகளில் பெரும் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக பட்டா பெயர் மாற்றம், கட்டிட வரைபட அனுமதி, நில அளவை சான்று, சொத்து வரி நிர்ணயம் போன்ற முக்கிய பணிகளுக்காக நகராட்சி அலுவலகத்தை அணுகும் பொதுமக்கள் நீண்ட நாட்களாக காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி கட்டுமானத் தொழிலாளர்கள், வணிகர்கள் மற்றும் நில உரிமையாளர்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். நகராட்சியில் நகர நில அளவையர் இல்லாததால் பல கோப்புகள் நிலுவையில் இருப்பதாகவும், அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகளின் மூலம் பணிகளை மேற்கொள்ள முயன்றாலும் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து குணசேகரன் என்பவர் கூறியதாவது, “ஒட்டன்சத்திரம் வேகமாக வளர்ந்து வரும் நகரமாக மாறியுள்ளது. அதற்கேற்ப நகர நிர்வாக வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும். கிராம கணக்கில் உள்ள பகுதிகளை விரைந்து நகரக் கணக்கிற்கு மாற்றி, நிரந்தர நகர நில அளவையரை நியமிக்க வேண்டும்” என்றனர்.எனவே ஒட்டன்சத்திரம் நகராட்சியில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்கவும், பொதுமக்களின் சிரமத்தை குறைக்கவும் தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து நகர நில அளவையரை நியமிக்க வேண்டும் என கூறினார்.