வடமதுரை, ஜூன் 26: ராமநாதபுரம் கிராமத்தில் இருந்து செட்டிபட்டி கிராமத்திற்குச் செல்லும் சேதமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடமதுரை அருகே காணப்பாடி ஊராட்சிக்குட்பட்ட ராமநாதபுரம் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊரின் வழியாக வரும் சாலை வடமதுரை - புகையிலைப்பட்டி மெயின் ரோட்டில் இருந்து வலது புறமாக பிரிந்து சுமார் 3 கிமீ தூரம் செட்டியபட்டி நோக்கி செல்கிறது. இந்த சாலை குண்டும் குழியுமாக பள்ளமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் மோசமான நிலையில் இருந்தது.
மேலும் லேசாக மழை பெய்தாலே சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கும். இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டனர். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறும்போது, இந்த சாலை வழியாக தினமும் வாகனங்களில் போய் வருகிறோம். எங்கள் ஊரில் இருந்து வேல்வார்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சைக்கிள் மற்றும் நடந்து இந்த சாலை வழியாக செல்கின்றனர். மேலும் திண்டுக்கல்லில் செயல்படும் கல்லூரிகளுக்கு எங்கள் ஊரில் இருந்து ஆண், பெண் மாணவர்கள் இந்த சாலை வழியாக தினமும் சென்று வருகின்றனர், மழை காலங்களில் இந்த சாலையில் வாகனங்களில் மற்றும் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகிறோம்.
மேலும் எங்கள் ஊரைச் சேர்ந்த விவசாயிகள் மில் தொழிலாளிகள் என பல்வேறு தரப்பினர் தினமும் இந்த சாலை வழியாக சென்று வருகிறோம். இது தவிர வடமதுரையில் சனிக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தைக்கு வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கவும் செல்லும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் ஆடு, கோழிகளை சந்தையில் விற்பனை செய்யவும் வடமதுரைக்கு இந்த சாலை வழியாக போய் வருகின்றனர். மேலும் வடமதுரை மற்றும் வேடசந்தூர் தாலுகாவில் செயல்படும் தனியார் நூற்பாலைகளுக்கு ஆட்களை ஏற்றி வரும் நூற்றுக்கும் மேற்பட்ட மில் வேன்கள் இந்த சாலை வழியாக தினமும் வந்து செல்கிறது. இந்தச் சாலை அமைப்பதற்கு ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு சாலை முழுவதும் பரப்பி நீண்ட நாட்கள் ஆகிறது.
இதனால் இந்த சாலையில் பயணிக்கும் போது வாகனங்களின் டயர் அடிக்கடி பஞ்சர் ஆகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்ற அபாயம் உள்ளது. இது தவிர அருகில் உள்ள குப்பமுத்துப்பட்டி புதுக்காளரம்பட்டி ஆகிய பகுதிகளை சார்ந்த கிராம மக்கள் இந்த சாலை வழியாக வேல்வார் கோட்டை கிராமத்தை எளிதில் அடைந்து அங்கிருந்து திருச்சி- திண்டுக்கல் நான்கு வழி சாலை வழியாக எளிதில் திண்டுக்கல் நகரை அடைவார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த சாலையை ஆய்வு செய்து புதிதாக அமைத்து கொடுத்தால் எங்கள் பகுதி விவசாயிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் பயனடைவார்கள். மேலும் இந்த பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் யாருக்காவது திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனால் 108 ஆம்புலன்ஸில் ஏற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்வதற்கு இந்த சாலை தான் முக்கிய வழியாக உள்ளது.
மேலும் கிணற்றில் கால்நடைகள் விழுந்தாலோ அல்லது தீ விபத்து ஏற்பட்டாலோ தீயணைப்பு துறை வாகனங்கள் இந்தச் சாலை வழியாகத்தான் அருகில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் ராமநாதபுரம் முதல் செட்டியபட்டி பிரிவு வரை விரைவில் தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.


