Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இடைத்தரகர்கள் தலையீட்டை தவிர்க்க கண்வலி கிழங்கு விற்பனை மையம் அமைக்க வேண்டும்: ஒட்டன்சத்திரம் பகுதி விவசாயிகள் கோரிக்கை

ஒட்டன்சத்திரம்: இடைத்தரகர்கள் தலையீட்டை தவிர்க்க அரசு சார்பில் கண்வலி கிழங்கு விற்பனை மையம் அமைக்க வேண்டும் என ஒட்டன்சத்திரம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்காந்தள் மலர் என அழைக்கப்படும் கண் வலி கிழங்கு மற்றும் விதைகள் மருத்துவ துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு மருந்துகள் தயாரிப்பில் இவை அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் பெரும்பாலான இடங்களில் நேரடி சந்தை இல்லாததால், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இடைத்தரகர்களிடம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டியுள்ளது. இதனால் உண்மையான சந்தை விலையை விட குறைந்த விலையே கிடைப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பயிரிடப்படும் கண்வலி கிழங்கு மற்றும் விதைகளின் விலை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ கண்வலி கிழங்கு ரூ.4000க்கு விற்பனையான நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ.7,500 முதல் ரூ.8,000 வரை விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து கண்வலி விதை உற்பத்தியாளர் சங்க நிறுவன தலைவர் லிங்கசாமி கூறியதாவது: கண்வலி கிழங்கு மற்றும் விதைகளின் விலை உயர்வு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் இது தொடர்ந்து நீடிக்குமா என சந்தேகம் உள்ளது. அரசு சார்பில் விற்பனை கூடங்கள் அமைத்து ஏல முறையில் விற்பனை நடத்தினால் இடைத்தரகர்கள் ஆதிக்கம் குறையும். இதனால் விவசாயிகளுக்கு நேரடி லாபம் கிடைக்கும். செங்காந்தள் சாகுபடிக்கு ஆரம்ப முதலீடு அதிகம் தேவைப்படுவதால் கூட்டுறவு சங்கம் மூலம் கிலோ ஒன்றுக்கு ரூ.5000 வரை கடனுதவி வழங்கினால் மிகவும் உதவியாக இருக்கும். இதனால் சாகுபடி பரப்பளவு மேலும் அதிகரிக்கும். செங்காந்தள் சாகுபடியை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும். ஆதார விலை நிர்ணயம் மற்றும் அரசு கொள்முதல் மையம் அமைக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.