Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பொய்த்து போனது பருவமழை வேகமாக வறண்டு வரும் பழநி அணைகள்: குடிநீருக்கு சிக்கல்

பழநி, ஜூலை 23: பருவமழை பொய்த்து போனதால் பழநி அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் குடிநீருக்கு சிக்கலாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். பழநி நகர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களின் குடிநீர் தேவை இப்பகுதியில் உள்ள அணைகளை நம்பி இருந்து வருகிறது. மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீராதாரங்களான பாலாறு பொருந்தலாறு மற்றும் குதிரையாறு அணைகளில் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் மழை விரைவில் பெய்யாவிட்டால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. நேற்றைய நிலவரப்படி 1,524 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பாலாறு பொருந்தலாறு அணையில் தற்போது 249.490 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே இருப்பில் உள்ளது.

இது மொத்த கொள்ளளவில் 16.37 சதவீதம் மட்டுமே ஆகும். அணையின் முழு உயரம் 65 அடி என்ற நிலையில், தற்போது நீர்மட்டம் 35.24 அடியாக பதிவாகி உள்ளது. அணைக்கு தற்போது வினாடிக்கு 9 கனஅடி மட்டுமே நீர் வந்து கொண்டிருக்கிறது. அதே அளவிலேயே வெளியேற்றமும் நடைபெறுகிறது. பாசனத்திற்காக ஜமீன், தடாகுளம் மற்றும் இடது பிரதான கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதேபோல் பழநி பகுதியின் மற்றொரு முக்கிய நீராதாரமான குதிரையாறு அணையிலும் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 80 அடி உயரமுள்ள குதிரையாறு அணையின் நீர்மட்டம் 49.40 அடியாக உள்ளது. அணையில் இருந்து 8 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இரு அணைகளிலும் நீர் இருப்பு சரிவடைந்து வருவது, எதிர்கால குடிநீர் விநியோகத்தை பாதிக்கும் சூழலை உருவாக்கி உள்ளது.

ஏற்கனவே பருவமழை பொய்த்து போன நிலையில் கடந்த சில நாட்களாக பழநி பகுதியில் குறிப்பிடத்தக்க மழை பெய்யாததால் அணைகளுக்கு புதிய நீர்வரத்து ஏற்படவில்லை. இதனால் அணைகளின் நீர் இருப்பு மேலும் குறையும் அபாயம் நிலவுகிறது. எனவே, பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென்றும், அணைகளின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.