Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம், ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு திட்டங்களின் கீழ், அவர்களை பயன்பெறச் செய்து, உரிய பலன்களும் அவர்களுக்கு வழங்கும் பணி முனைப்புடன் நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகள் தங்களின் கோரிக்கைகளை அளிப்பதற்கு ஏதுவாக, பிரதி வாரம் தோறும் கலெக்டர் அலுவலகத்தில், அவர்களுக்கென தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டமும், பிரதி மாதந்தோறும் வருவாய் கோட்டாட்சியர்கள் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டமும், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம், இதுதவிர, மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் போன்றவைகள் நடத்தப்பட்டு, அவர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளையும், அவர்கள் உடல்நலத்தை பேணிக்காத்திடும் பொருட்டும் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், தேசிய அடையாள அட்டை வேண்டுதல், யுடிஐடி பதிவு செய்தல், ஆதார் அட்டை பதிவு செய்தல், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு மேற்கொள்ளுதல், பிற துறைகளின் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்கள், உதவி உபகரணங்கள், வங்கிக் கடனுதவிகள், வேலைவாய்ப்பு பயிற்சிகள், பராமரிப்பு உதவித்தொகை மற்றும் மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 321 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இம்மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது நடவடிக்கை மேற் கொள்ளவும், மீதமுள்ள மனுக்களை மறுபரிசீலனை செய்து உரிய பயன்களை மாற்றுத்திறனாளிகள் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

கூட்டத்தில், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.1,938 மதிப்பீட்டிலான ஊன்று கோல்களையும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.15,750 மதிப்பீட்டிலான மடக்கு சக்கர நாற்காலியினையும் என மொத்தம் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17,688 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில், டிஆர்ஒ ஜெயபாரதி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் சீத்தாராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.