திண்டுக்கல், ஆக.21: திண்டுக்கல் அருகே, நிலக்கரி ஏற்றி வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் இருந்து மேட்டூருக்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டது. இந்த லாரியை தூத்துக்குடி மாவட்டம் சிவகலையைச் சேர்ந்த மாரீஸ்வரன் (31) என்பவர் ஓட்டி வந்தார். திண்டுக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தாடிக்கொம்பு அடுத்த பூதிப்புரம் அருகே லாரி சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் கட்டுப்பாடின்றி தாறுமாறாக ஓடிய லாரி, சாலையோர தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதி அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மாரிஸ்வரனுக்கு வலது கையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுது. உடனே அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மீட்புப் பணிகளை மேற்கொண்டதுடன் விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



