நிலக்கோட்டை, ஆக.21: செம்பட்டியை அடுத்த ஆதிலட்சுமிபுரம் அருகே தனியார் மாட்டு தீவனம் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை பழநியில் உள்ள ஒரு உரக்கடையில் இருந்து, விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் சுமார் 100க்கும் மேற்பட்ட யூரியா உரம் மூட்டைகளை ஒரு லாரியில் ஏற்றிக்கொண்டு, இங்குள்ள மாட்டு தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள ஒரு அறையில் இறக்கி வைத்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேஸ்வரி, வேளாண்மை அலுவலர் விக்னேஸ்வரன் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள், சம்பந்தப்பட்ட மாட்டு தீவனம் தயாரிக்கும் நிறுவனத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து அங்கு யூரியா உரம் மூடைகள் பதுக்கி வைக்கப்படிருந்த அறைக்கு சீல் வைத்தனர். இது குறித்து தொடர்ந்து நேற்று 3வது நாளாக விசாரணை நடத்தினர்.இதுகுறித்து வேளாண்மை அலுவலர்களிடம் கேட்டபோது, மாட்டு தீவனம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள யூரியா உரம் உள்ள அறைக்கு சீல் வைத்துள்ளோம். உரிய முறையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றோம். முறைக்கேட்டில் ஈடுபட்டது தெரியவந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



