பழநி புறநகர் சாலைகளில் தெருவிளக்குகள் இல்லாததால் திருட்டு அச்சத்தில் மக்கள்: அடிக்கடி விபத்துகளும் நடப்பதாக புகார்
பழநி, ஜூலை 21: பழநி புறநகர் சாலைகளில் தெருவிளக்குகள் இல்லாததால் விபத்து மற்றும் திருட்டு அச்சத்துடன் பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. பழநி நகரின் புறநகரில் கோதைமங்கலம், கலிக்கநாயக்கன்பட்டி, பாண்டியன் நகர், தட்டான்குளம், சண்முகநதி சாலை உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இச்சாலைகளின் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வேலை, கல்வி மற்றும் வணிக தேவைகளுக்காக பைக், கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர்.
ஆனால், பல இடங்களில் தெருவிளக்குகள் இல்லாததால் மாலை நேரத்திற்கு பிறகு சாலைகள் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களை சரிவர கணிக்க முடியாமல் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். இதுதவிர சாலைகளில் உள்ள பள்ளங்கள், வேகத்தடைகள் மற்றும் சாலையோர தடைகள் இருள் காரணமாக தெளிவாக தெரியாததால் விபத்துகள் அனுதினமும் நடந்து வருகின்றன. மேலும் இரவு நேரங்களில் தெருநாய்கள் மற்றும் கால்நடைகள் திடீரென சாலையை கடப்பதால் வாகனஓட்டிகள் இருட்டில் கவனிக்க முடியாமல் நிலைதடுமாறும் சம்பவங்களும் ஏற்படுகின்றன.
மேலும் போதிய வெளிச்சம் இல்லாததால் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடைபெறக்கூடும் என்ற அச்சமும் பொதுமக்களிடையே நிலவுகிறது. குறிப்பாக பெண்கள், முதியவர்கள் மற்றும் இரவு நேர பணிக்கு சென்று வருபவர்கள் பாதுகாப்பு குறித்த கவலையுடன் பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த தெருவிளக்குகளை உடனடியாக சீரமைத்து மின்விளக்குகள் இல்லாத பகுதிகளில் புதிய எல்இடி தெருவிளக்குகள் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.



