பழநி, ஆக. 20: பழநி கோயிலில் 2வது ரோப்கார் திட்டம் உயிர் பெறுமா என பக்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். 1 வருடத்திற்கு சராசரியாக சுமார் 1.20 கோடி பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் பக்தர்கள் மலைக்கோயில் செல்வதற்கு வசதியாக மேற்கு கிரிவீதியில் இருந்து வின்ச்சும், தெற்கு கிரிவீதியில் இருந்து ரோப்காரும் இயக்கப்படுகிறது. இதில் ரோப்காரின் பயண நேரம் 3 நிமிடமாகும். ஒரு முறைக்கு 12 பக்தர்கள் மட்டுமே பயணிக்க முடியும். எனவே, நவீன வசதிகளுடன் கூடிய 2வது ரோப்கார் அமைக்க அறநிலையத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இதன்படி சுமார் ரூ.70 கோடி மதிப்பீட்டில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரோப்கார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த சென்னையை சேர்ந்த நிறுவனம் 2வது ரோப்கார் அமைப்பதற்கான டெண்டரை பெற்று பணிகளை துவங்கியது. பணிகள் துவங்கிய சில மாதங்களிலேயே கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டது. இதனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக சுமார் 2 வருடங்கள் பணிகள் தடைபட்டன. அதன்பின்பு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு காரணமாக ஒப்பந்த தொகையை உயர்த்தி வழங்க தனியார் நிறுவனம் கோரிக்கை விடுத்தது. இதுதொடர்பான சட்ட நடவடிக்கைகளால் 2வது ரோப்கார் பணி முடக்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் கிட்டத்தட்ட ரத்து செய்யப்பட்ட நிலையிலேயே உள்ளது.
பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் விடுமுறை தினம் மற்றும் விசேஷ நாட்களில் ரோப்காரில் பயணிக்க பக்தர்கள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது. பழநி கோயில் நிர்வாகம் தற்போது சொத்து பாதுகாப்பு, ஆன்லைன் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், 2வது ரோப்கார் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
ஏற்கனவே துவங்கப்பட்ட பணிகள், மேற்கொள்ளப்பட்ட செலவுகள், கட்டமைப்புகள், டெண்டர் நிலை உள்ளிட்டவற்றை அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்து தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமெனில் புதிய மதிப்பீட்டுடன் 2வது ரோப்கார் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



