கொடைக்கானல்: கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான தாண்டிக்குடி- சித்தூர் இடையே மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் வகையில் தரமற்ற முறையில் தார் சாலை அமைக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் தாண்டிக்குடி, மங்களம் கொம்பு, பெரும்பாறை, காணல்காடு உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த மலைக்கிராமங்களுக்கு வத்தலக்குண்டு பகுதியில் இருந்து சித்தூர் மலைச்சாலை வழியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் கொடைக்கா னல் கீழ்மலை பகுதியா ன தாண்டிக்குடி மலைக்கிராமத்தில் இருந்து சித்தூர் பகுதிக்கு செல்லும் மலைச்சாலையில் சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.10 கோடியே 60 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி கடந்த 2 நாட்களுக்கு முன்பு துவங்கி நடந்து வருகிறது. இதனால் இச்சாலையில் கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டு அப்பகுதி மக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.
எனவே வத்தலக்குண்டு பண்ணைக்காடு வழியாக பெரும்பாறை வரை பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே தாண்டிக்குடி- சித்தூர் மலைச்சாலையில் அமைக்கப்பட்ட தார் சாலை தரமில்லாமல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சரளை கற்கள் பெயர்ந்து குவியல், குவியலாக குவிந்து கிடக்கின்றன. மேலும் வெறும் கைகளால் சாலையை பெயர்க்கும் அளவிற்கு மோசமாக சாலை அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரமான முறையில் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை துறை உதவி பொறியியாளர் சந்தோஷ் கூறுகையில், ‘உரிய வெப்பமின்றி தார் கலந்த ஜல்லி கற்களை கொண்டு வந்து சாலை அமைத்ததால் தார் தனியாக பெயர்ந்து கற் குவியலாக மாறியுள்ளது. அதனை சீர்செய்து விரைவில் தரமான சாலை அமைக்கும் பணி முழுமை பெறும்’ என்றார்.



