திண்டுக்கல், ஆக. 19: திண்டுக்கல்லில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் ஆக.21ல் நடைபெறவுள்ளது என கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:
வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையால் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களை தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் பொருட்டு சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதத்திற்குரிய தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் ஆக.21ம் தேதி காலை 10 மணிக்கு நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் பல முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்யவுள்ளனர். இதில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்களது கல்வி சான்று, ஆதார் அடையாள அட்டை, புகைப்படம் மற்றும் சுய விபரங்கள் ஆகியவற்றின் நகல்களுடன் நேரில் கலந்து கொள்ளலாம். மேலும் முகாமில் மத்திய மற்றும் மாநில அரசின் திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு இலவச திறன் எய்தும் பயிற்சிக்கும் பதிவு செய்து கொள்ளலாம்.
இத்தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை வேலையளிப்பவர்கள் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களின் விபரத்தினையும், தொழிற்பழகுநர் பயிற்சிக்கு தேவைப்படும் பணியாளர்களின் விபரத்தினையும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.
மேலும், இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https://tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து முகாமில் கலந்து கொள்ளுமாறும் மற்றும் முகாம் தொடர்பான விபரங்களை அறிய DINDIGUL EMPLOYMENT OFFICE எனும் டெலிகிராம் சேனலில் இணையவும். மேலும் விபரங்களுக்கு 9499055924 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வேலை வாய்ப்பு முகாமின் மூலம் பணியமர்த்தம் செய்யப்படுபவர்களின் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு எக்காரணத்தை கொண்டும் இரத்து செய்யப்படமாட்டாது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.



