ரெட்டியார்சத்திரம், ஆக.18: மின் விபத்துக்களை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்வாரிய அதிகாரிகள் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: பொதுமக்கள் எந்த காரணத்திற்காகவும் மின்வேலிகளை உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஈரக்கையுடன் சுவிட்சுகள், பிளக்குகள் உள்ளிட்ட மின் சாதனங்களை தொடுவதை தவிர்க்க வேண்டும். ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற தரமான வயர்களையும், மின் சாதனங்களையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஆடு, மாடு போன்ற கால்நடைகளை மின் கம்பத்திலோ, மின் இழுவைக் கம்பிகளிலோ கட்டுவதை தவிர்க்க வேண்டும். இணைப்பு கொடுத்துள்ள மின் வயர்களில் துணிகளை உலர்த்தக்கூடாது. கட்டுமான பணி நடைபெறும் போது உயரழுத்த, தாழ்வழுத்த மின் பாதைகளுக்கு போதிய இடைவெளி விட வேண்டும். உயரமான இரும்பு கம்பிகளை மின்பாதைகளின் அருகே பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மின் பாதைகளை கடக்கும் பொழுது போதிய இடைவெளி இருக்கும் வகையில் பொருட்களை ஏற்றிச்செல்ல வேண்டும். மின் பழுது ஏற்பட்டால் அருகில் உள்ள மின்சார அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு கூறியுள்ளனர்.



