Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொடைக்கானல் நகரில் காட்டெருமைகள் இன்பச்சுற்றுலா: போக்குவரத்து கடும் பாதிப்பு

கொடைக்கானல், ஜூன் 16: கொடைக்கானல் நகரில், நேற்று காட்டெருமைகள் கூட்டமாக உலா வந்ததால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கொடைக்கானல் மலைப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் காட்டெருமைகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டெருமைகள் கூட்டம், நகர்ப்பகுதிகளில் உலா வருவதும், குடியிருப்பு பகுதிகளில் முகாமிடுவதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் கொடைக்கானலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் டிப்போ பகுதியில், நேற்று திடீரென காட்டெருமைகள் கூட்டமாக உலா வந்தன. இவற்றில் ஒரு காட்டெருமை, கன்று ஈன்று சில மணி நேரம் ஆனதாக தெரிகிறது. இதனால் அது, கன்றுடன் உலா வந்தது. மேலும் பொதுமக்களை பார்த்த காட்டெருமை கன்று அச்சமடைந்து, ஒரு டூவீலரின் பின்னால் சென்று பதுங்கியது.

இதனைப்பார்த்த தாய் காட்டெருமை, அங்கும், இங்குமாக தாவிக்குதித்ததால் அச்சமடைந்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் ஒரு சில காட்டெருமைகள் உணவு விடுதியின் வெளிப்பகுதியில் இருந்த தண்ணீரை அருந்தியதுடன், உள்ளே நுழைய முயன்றது. இதனால் அப்பகுதியே பெரும் பரபரப்பாக காணப்பட்டது. இதற்கிடையே தாய் காட்டெருமையின் அருகில் கன்று வந்து சேர்ந்த நிலையில், அவற்றை பாதுகாப்பாக இரண்டு காட்டெருமைகள் அழைத்து சென்றன.

இந்த காட்சி பார்த்தவர்களை வியப்படைய செய்தது, இதற்கிடையே நகர் பகுதியில் காட்டெருமைகள் எவ்வித அச்சமும் இன்றி கூட்டமாக சுற்றி வந்ததால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுபோல் காட்டெருமைகள் நகர்ப்பகுதிக்குள் உலா வருவதை தடுக்க, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.