நிலக்கோட்டை, ஆக.14: செம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட, ஆயிரம் கிலோ போதை பொருட்களை போலீசார் தீவைத்து அழித்தனர். திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில், மளிகை கடை பெட்டிக்கடை உள்ளிட்ட இடங்களில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக செம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரம் கிலோ போதை பொருள்களை நீதிமன்றம் அனுமதி பெற்று, நேற்று முன்தினம் தீ வைத்து அழிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி செம்பட்டி அருகே, கோழிப்பண்ணை கண்மாய் பகுதியில் செம்பட்டி காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில், ஆத்தூர் வட்டாட்சியர் சுரேஷ்குமார் முன்னிலையில் செம்பட்டி காவல் சார்பு ஆய்வாளர் ஷேக் அப்துல்லா, சிறப்பு சார்பு ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் இணைந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை தீ வைத்து அழித்தனர்.



