பழநி, ஆக.14: பழநியில் அதிகரித்திருக்கும் ரேசன் அரிசி கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்று பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. பழநி தாலுகாவுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் ஏழை, எளிய மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாகவும், மானிய விலையிலும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய அரிசி உரிய முறையில் விநியோகம் செய்யப்படாமல் வெளிச்சந்தைக்கு கொண்டு செல்லப்படுவதாக புகார்கள் எழுகின்றன. அரிசி வாங்கும் நுக்வோரின் வீடுகளுக்கு பைக்கில் சென்று கிலோவிற்கு ரூ.10 அளவிற்கு பணம் கொடுத்து ரேஷன் அரிசிகளை சிறு வியாபாரிகள் பெற்றுக் கொள்கின்றனர். பின், இடைத்தரர்கள் மூலம் மூட்டைகளாக வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகின்றன. சில இடங்களில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி மொத்தமாக சேகரித்து கடத்துவதாகவும் கூறப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த பழநி சுற்றுவட்டாரத்தில் உள்ள முக்கிய சாலைகள், கிராமப்புற இணைப்புச் சாலைகள் மற்றும் சந்தைப் பகுதிகளில் அரிசி கடத்தலை தடுக்க தீவிர வாகன சோதனை நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் சந்தேகத்திற்கிடமான வகையில் செல்லும் சரக்கு வாகனங்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களை கண்காணித்து சோதனையிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ரேஷன் கடைகளில் இருப்பு விவரம், விநியோகப் பதிவுகள், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட அளவு ஆகியவற்றை அவ்வப்போது ஆய்வு செய்தால் முறைகேடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். ஒரு சில இடங்களில் அரிசி கடத்தல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதன் பின்னரும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதாக புகார் உள்ளது. அரிசி கடத்தல் வழக்கில் சிறை சென்றுவிட்டு, வெளியே வந்தவர்கள் மீண்டும் அரிசி கடத்தலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
எனவே, அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் தண்டனை வழங்க வேண்டும். பிடிபடும் வாகனங்கள் மற்றும் அரிசியின் அளவு மட்டுமின்றி, அதன் பின்னணியில் செயல்படும் நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தி, கடத்தல் வலையமைப்பை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மேலும், ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து திடீர் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். பழநி நகரம் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமப்புறங்களிலும் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். பழநி பகுதியில் அரிசி கடத்தல் அமோகமாக நடந்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக எந்தவித கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாதது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது என்றனர்.



