வத்தலக்குண்டு, ஆக. 13: வத்தலக்குண்டு அருகே டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என கிராமமக்கள் எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வத்தலக்குண்டு அருகே ரெங்கப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் சுமார் 1000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலையோரம் அரசு டாஸ்மாக் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் வழியாகத்தான் ஆண்டிபட்டி, காமாட்சிபுரம், தெப்பத்துப்பட்டி, குன்னுவாராயன்கோட்டை உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டும்.
மேலும் இந்த டாஸ்மாக் கடை அருகே அரசு தொடக்கப்பள்ளி, பஸ் நிலையம், மருத்துவமனை மற்றும் வழிபாட்டு தலங்கள் உள்ளன. இதனால் தினந்தோறும் பள்ளி- கல்லூரி மாணவிகள், வேலை மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் பெண்கள் அச்சத்துடன் இப்பகுதியை கடந்து சென்று வருகின்றனர். மேலும் டாஸ்மாக் கடை முன்புற சாலையில் வாகனங்களை குறுக்கும், நெடுக்குமாக நிறுத்துவதால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் இந்த டாஸ்மாக் கடையை அகற்ற கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனுக்கள் அளித்தனர்.
ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி மக்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த டாஸ்மாக் கடையை அகற்ற கோரி சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது நிலக்கோட்டை தாசில்தார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் இந்த டாஸ்மாக் கடை அகற்றப்படும் என உறுதியளித்தனர்.
அதன்பின்பே போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் இதுவரை இந்த டாஸ்மாக் கடையை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கொதித்தெழுந்த இப்பகுதி ஆண்கள் பெண்கள், பள்ளி சீருடையுடன் மாணவ, மாணவிகள் என 200க்கும் மேற்பட்டோர் திரண்டு ஊர்வலமாக நேற்று சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைக்கு வந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கவில்லை என்றால் குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்ததும் நிலக்கோட்டை தாசில்தார் ராமசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு இங்கிருந்து அகற்றப்படும் என உறுதியளித்தனர். அதன்பின்பே அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சில மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.



