Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

விபத்து வழக்கில் இழப்பீடு இல்லை: திண்டுக்கல்லில் அரசு பஸ் ஜப்தி

திண்டுக்கல், ஆக. 12: திண்டுக்கல்லில் விபத்து வழக்கில் இழப்பீட்டு தொகை வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. திண்டுக்கல் குள்ளனம்பட்டியை சேர்ந்தவர் கஸ்தூரி ராஜ். கூலித்தொழிலாளி. இவரது மகன் பார்த்தசாரதி (23). இந்நிலையில் கடந்த 30.6.2023 அன்று ஏ.வெள்ளோடு பிரிவில் பார்த்தசாரதி மற்றும் அவரது நண்பர் பாண்டியராஜன் ஆகியோர் டூவீலரில் சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து மோதி பார்த்தசாரதி, பாண்டியராஜன் ஆகியோர் மரணமடைந்தனர்.

இந்த விபத்திற்கு இழப்பீடு கோரி பார்த்தசாரதியின் தந்தை கஸ்தூரி ராஜ், அவரது தாயார் கமலா ஆகியோர் திண்டுக்கல் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கறிஞர் சாக்ரடீஸ் ஆஜராகி வாதாடினார். விசாரணை முடிவில் கடந்த 03.04.2025 அன்று மனுதாரர்களுக்கு இழப்பீடாக ரூ.24 லட்சத்து 4 ஆயிரம் அரசு போக்குவரத்து கழகம் தர வேண்டும் என நீதிபதி சோமசுந்தரம் தீர்ப்பளித்தார். ஆனால் இழப்பீடு வழங்கப்படவில்லை. இதனால் மனுதாரர்கள் நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து தீர்ப்பு தொகையை செலுத்தாத காரணத்தால் வட்டியுடன் சேர்த்து மனுதாரர்களுக்கு ரூ.28 லட்சத்து 34 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும், அதற்காக அரசு பேருந்தை ஜப்தி செய்யவும் நீதிபதி சோமசுந்தரம் கடந்த 23.06.2026 அன்று உத்தரவிட்டார். அதன்படி இழப்பீட்டு தொகை வழங்காத காரணத்தினால் நீதிமன்ற ஊழியர்கள் நேற்று திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் குமுளியில் இருந்து ஈரோட்டுக்கு செல்ல இருந்த அரசு பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தினர்.