திண்டுக்கல், டிச.10: திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் டிஎஸ்பிமுருகன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் தலைமையில், எஸ்.ஐ மலைச்சாமி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வத்தலகுண்டு பைபாஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குட்டியபட்டி அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 4 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்த முகமது ஆசிக் வட்டாத் (37), மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த முகமது அலி ஜின்னா (30), ஜெபன் வின்சென்ட் (22), நத்தம் குட்டுபட்டியை சேர்ந்த ராஜதுரை (24) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் 2 டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


