வத்தலக்குண்டு, ஆக.10: பயிர்கள் பாதிப்பால் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் போது விவசாய தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.வத்தலக்குண்டு மற்றும் சுற்றுவட்டாரங்களில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இப்பகுதியில் விளைச்சல் இல்லாமல் வறட்சியால் பயிர்கள் பாதிக்கப்படுவது அல்லது காலம் தவறிய பருவ மழையால் பயிர்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. மாவட்டம் முழுவதும் விவசாயத்தை நம்பி மட்டுமே பல லட்சக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் போலவே, விவசாய தொழிலாளர்களும் அதிகமாக உள்ளனர். இவர்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த உப தொழில்களில் மட்டுமே தினக்கூலிகளாக ஈடுபட்டு வருபவர்களாவர்.
குறைந்தது மாதத்திற்கு 20 நாட்களாவது வேலை இருந்தால் மட்டுமே அதில் கிடைக்கும் வருமானம் மூலம் குடும்பத்திற்கான செலவினங்களை செய்ய முடியும். ஆனால் விவசாய தொழிலில் ஆண்டுதோறும் தொடர்ந்து பல மாதங்களாக வேலை இல்லாமல் இருப்பதால் விவசாய தொழிலாளர்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். இதனால் வறட்சி மற்றும் கூடுதல் மழையால் பயிர் பாதிப்பிற்குள்ளாகும் நிலையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் போது விவசாய தொழிலாளர் குடும்பத்திற்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என விவசாய சங்கங்கள் வலியுறுத்திள்ளன.




