Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கஞ்சா தடுப்பு வேட்டையில் 63 பேர் கைது: 6.2 கிலோ பறிமுதல்

திண்டுக்கல், ஜூலை 8: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று நாட்கள் நடந்த கஞ்சா தடுப்பு வேட்டையில் 63 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 6.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் போதை பொருள் தொடர்பான குற்றங்களை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் கடந்த ஜூலை 3, 4, 5 ஆகிய மூன்று நாட்கள் மாவட்டம் முழுவதும் சிறப்பு அதிதீவிர கஞ்சா தடுப்பு வேட்டை மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் தலைமையில் தனித்தனி காவல் குழுக்கள் அமைக்கப்பட்டு முக்கிய சாலைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தை பகுதிகள், தனிமையான இடங்கள் மற்றும் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

சோதனையின் முதல் நாளான ஜூலை 3ம் தேதியன்று மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலைய எல்லைகளில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 9 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 320 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டாம் நாளான ஜூலை 4ம் தேதியன்று மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையில் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 31 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 2 கிலோ 680 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. மூன்றாம் நாளான ஜூலை 5ம் தேதி 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 23 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 3 கிலோ 195 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன்மூலம் மூன்று நாட்கள் நடைபெற்ற சிறப்பு கஞ்சா தடுப்பு வேட்டையில் மொத்தமாக 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து மொத்தம் 6 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதேபோல் கஞ்சா தடுப்பு நடவடிக்கையுடன் இணைந்து தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் வகையிலும் மாவட்டம் முழுவதும் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் கடந்த மூன்று நாட்களில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து மொத்தம் 550 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து எஸ்பி கூறுகையில், ‘திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் போதை பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களின் விற்பனை, கடத்தல் மற்றும் பதுக்கல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

போதை பொருள் தொடர்பான தகவல்கள் ஏதேனும் பொதுமக்களுக்கு தெரிந்தால் Drug free Tamilnadu என்ற இணையதளம் மூலம் தகவல் தெரிவிக்கலாம். இதில் உங்கள் பெயர், முகவரி பதிவு செய்ய தேவையில்லை’ என்றார்.