நிலக்கோட்டை அருகே சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகள்: நோய்த்தொற்று அபாயம்
நிலக்கோட்டை, டிச.7: நிலக்கோட்டை அருகே, குல்லலக்குண்டுவில் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது குல்லலக்குண்டு ஊராட்சி. இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே பள்ளபட்டியிலிருந்து பொட்டிசெட்டி வழியாக கொடைரோடு செல்லும் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. அவற்றில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்வோர் மூக்கை பிடித்தபடி செல்ல வேண்டியுள்ளது. மேலும் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிப்போர் சுகாதார சீர்கேட்டிற்குள்ளாகி வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி, அப்பகுதியில் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.