ஒட்டன்சத்திரம், ஆக.7: ஒட்டன்சத்திரத்தில் கேரளாவுக்கு அரிசி மூட்டைகளை கொண்டு சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி டிரைவர் சிறு காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார்.
சிவகங்கை மாவட்டம் புதுவயல் பகுதியில் இருந்து கேரள மாநிலம் மன்னார்காடு பகுதிக்கு அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி சென்றது. லாரியை காரைக்குடியைச் சேர்ந்த முருகன் (50) என்பவர் ஓட்டி சென்றார். நேற்று காலை திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சாலைபுதூர் மேம்பாலம் பகுதியில் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் இருந்த அரிசி மூட்டைகள் சாலையில் சிதறின. லாரியை ஓட்டிச் சென்ற முருகன் சிறிய காயங்களுடன் உயிர்தப்பினார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.



