திண்டுக்கல், ஆக.7: குஜிலியம்பாறை மற்றும் வேடசந்தூர் வட்டாரங்களில் உள்ள உரக்கடைகளில் யூரியா, காம்ப்ளக்ஸ் உர மூட்டைகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் அளித்தனர். இதனை அடுத்து, கலெக்டர் துர்கா மூர்த்தி உத்தரவின்படி, வேளாண் இணை இயக்குநர் கோவிந்தராசு மேற்பார்வையில், மாவட்ட வேளாண் தரக்கட்டுப் பாட்டு உதவி இயக்குநர் ராஜேஸ்வரி தலைமையில், வேளாண் அலுவலர்கள் அர்ச்சனா, திவாகர், முருகானந்தம், தியாகராஜன் ஆகியோர் குஜிலியம்பாறை, வேடசந்துார் பகுதியில் உள்ள 12 உரக்கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.
அதில் கோவிலுார், புளியம்பட்டி பகுதிகளில் உள்ள 2 உரக்கடைகளில் விதிமுறைகளை மீறி உர மூட்டைகளை விற்றது, பில் ரசீது, பதிவேடுகளை முறையாக பராமரிக்காத விபரங்கள் கண்டறிப்பட்டது. இதனையடுத்து விதி மீறல்களில் ஈடுபட்ட 2 உரக்கடைகளின் மீது உரக் கட்டுபாட்டு ஆணை படி, 21 நாட்களுக்கு விற்பனை தடை விதிக்கப்பட்டது. மேலும் யூரியா, டிஏபி பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.



