வேடசந்தூர், ஆக.7: வேடசந்தூர் அருகே, விபத்துகளைத் தடுப்பதற்காக சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த ரிப்ளெக்டர்களை வடமாநில இளைஞர்கள் திருடி, அவர்களது லாரியில் பொருத்துவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வேடசந்தூர் அருகே உள்ள தொட்டணம்பட்டி பகுதியில் இரவு நேரத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. இதனால் அந்த பகுதியில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பாக முக்கிய பகுதிகளில் சாலை டிவைடரில், வாகனங்களின் ஹெட்லைட் வெளிச்சம் பட்டதும் அது ஒளிர்ந்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கும் வகையில் மஞ்சள் ரிஃப்ளெக்டர்கள் பொருத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில் தொட்டணம்பட்டி பகுதியில், ஒருலாரியில் சென்ற வடமாநிலத்தை சேர்ந்த சில இளைஞர்கள், சாலையோரம் நின்று, அங்கு பொருத்தப்பட்டிருந்த ரிஃப்ளெக்டர்களை திருடியுள்ளனர்.
அதன்பின்னர் லாரியை சாலையோரம் நிறுத்தி, அந்த ரிஃப்ளெக்டர்களை தங்களது லாரியின் பின் பகுதியில் அலங்காரத்திற்காக பொருத்தியுள்ளனர். அந்த வழியே சென்ற நபர், அந்த காட்சியை வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.



