திண்டுக்கல், நவ. 3: திண்டுக்கல் உழவர் சந்தையில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் இயற்கை வேளாண் பொருட்களை நேரடியாக விவசாயிகளிடமிருந்து நுகர்வோருக்கு விற்பனை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். நிலக்கோட்டை எம்எல்ஏ அய்யனார் விற்பனையை துவக்கி வைத்தார். அப்போது கலெக்டர் பேசியதாவது: இயற்கை வேளாண் விவசாயிகளின் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் உழவர் சந்தைகளில் இயற்கை வேளாண் விளைபொருட்களை வாரந்தோறும் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் உழவர் சந்தையில் இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு, இயற்கை வேளாண் பொருட்களை நேரடியாக விவசாயிகளிடமிருந்து நுகர்வோருக்கு விற்பனை செய்யும் நிகழ்ச்சி,திண்டுக்கல் உழவர் சந்தையில் துவக்கி வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இயற்கை வேளாண் முறையில் விளைவிக்கப்படும் பொருட்களுக்கு சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருதல், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்து உரிய விலை பெறுவதை உறுதி செய்தல் மற்றும் பொதுமக்களுக்கு தரமான இயற்கை வேளாண் விளைபொருட்களை கிடைக்க செய்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இத்திட்டமானது செயல்படுத்தப்பட்டுள்ளது. இயற்கை வேளாண் சான்றிதழ் பெற்ற விவசாயிகள் தங்களது விளைபொருட்களான பாரம்பரிய நெல் வகைகள் மற்றும் அரிசி, சிறுதானியங்கள், பயறு வகைகள், காய்கறிகள், பழங்கள், மிளகாய், மஞ்சள், மிளகு உள்ளிட்ட நறுமண பொருட்கள், நாட்டுக்கோழி முட்டைகள், தேன் மற்றும் இயற்கை வேளாண் முறையில் உற்பத்தி செய்யப்பட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை உழவர் சந்தைகளில் விற்பனை செய்யலாம்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திண்டுக்கல் உழவர் சந்தையில் விற்பனை செய்யப்படும் தரமான இயற்கை வேளாண் விளைபொருட்களை வாங்கி பயன்பெறலாம். மேலும், பொதுமக்களாகிய தாங்கள் உழவர் சந்தையில் விற்பனை செய்யப்படும் இயற்கை வேளாண் விளைபொருட்களை வாங்கி விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதற்கும், இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்கும் மற்றும் உழவர் சந்தைகளின் செயல்பாட்டை மேலும் வலுப்படுத்துவதற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். இதில் வேளாண்மை துணை இயக்குநர் உமா, வேளாண்மை அலுவலர்கள் பராசக்தி, நர்மதாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


