தனியார் கம்பெனி கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிப்பு; சிறப்பு கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகளுடன் வாக்குவாதம்; நிலக்கோட்டை அருகே பரபரப்பு
நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே குல்லலக்குண்டு ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், தனியார் தொழிற்சாலையால் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதாக கூறி அதிகாரிகளுடன் கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிலக்கோட்டை அருகே உள்ள குல்லலக்குண்டு ஊராட்சியில் தமிழ்நாடு உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி செயலர் விஜய கர்ணபாண்டியன் தலைமை வகித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட கிராம மக்கள், சந்தோஷபுரம், கல்லடிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் வாகன உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் பெயிண்ட் கழிவுகளால் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்ட்டுள்ளது. நிலத்திலிருந்து எடுக்கப்படும் குடிநீர் குடிக்க உகந்த நீராக இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத தண்ணீராக மாறியுள்ளது. கிராமத்தின் தென்பகுதியில் மூடப்பட்ட நிலையில் உள்ள அரசு கரும்பு ஆலையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள கழிவுகள் மழை பெய்யும் போது வெளியேறி விவசாய நிலங்களில் படர்ந்து துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கிராமக்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் குடிக்க உகந்ததா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். சந்தோஷ்புரத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ் தலையிட்டு, உங்கள் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.


