தர்மபுரி, ஜன.28: மொரப்பூர் அருகே கதிர்நாயக்கனஅள்ளியில், கிராம அளவிலான விவசாயிகள் பயிற்சி நேற்று நடைபெற்றது. மொரப்பூர் வட்டாரம் கதிர்நாயக்கனஅள்ளி கிராமத்தில், கிராம அளவிலான விவசாயிகள் பயிற்சி நேற்று நடைபெற்றது. பயிற்சிக்கு தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பழனிச்சாமி தலைமை வகித்து, அரசின் திட்டங்கள் மற்றும் மண்வளம் காப்பதன் அவசியம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். மத்திய திட்டம் வேளாண்மை துணை இயக்குநர் ரத்னம் கலந்துகொண்டு நுண்ணீர் பாசனம் குறித்தும், மத்திய அரசின் திட்டங்கள், மானியங்கள் குறித்தும் விளக்கினார். உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் திதேவி, மண் ஆய்வின் முக்கியத்துவம், உயிர் உரங்களின் பயன்கள், பயிர் விளைச்சல் போட்டி குறித்தும் எடுத்துரைத்தார். வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை உதவி வேளாண்மை அலுவலர் கணபதி, விற்பனைத்துறையின் செயல்பாடுகள் மற்றும் உழவர் சந்தை மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு கூறினார். கால்நடை உதவி மருத்துவர் கோகுல், கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவதன் அவசியம் மற்றும் துறை சார்நத திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். மொரப்பூர் வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமால், அட்மா திட்ட செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தார். இப்பயிற்சியில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.
+



