Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

எலுமிச்சை கிலோ ரூ.198க்கு விற்பனை

தர்மபுரி, ஆக.26: தர்மபுரிக்கு வரத்து அதிகரிப்பால், முருங்கைகாய் கிலோ ரூ.30 ஆக சரிந்த நிலையில், வரத்து குறைவால் எலுமிச்சை கிலோ ரூ.198 வரை அதிகரித்தது. தர்மபுரி உழவர் சந்தைக்கு, தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளையும் முருங்கைகாய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும், நுகர்வோரின் தேவைக்கேற்ப ராயக்கோட்டை பகுதி மார்க்கெட்டில் இருந்தும் முருங்கைக்காய் கொண்டு வரப்படுகிறது. கடந்த சில மாதங்களாக முருங்கைக்காய் வரத்து குறைந்ததால், ஒரு கிலோ ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று தர்மபுரி உழவர் சந்தைக்கு 200 கிலோ வரை முருங்கைக்காய் கொண்டு வரப்பட்டது. கடந்த 10ம் தேதி கிலோ ரூ.50க்கு விற்பனையான நிலையில் நேற்று கிலோ ரூ.30 ஆக சரிந்தது.இதற்கு மாறாக எலுமிச்சை விலை தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. கோடை முடிந்தும், மாவட்டத்தில் சுமார் 97 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் தகித்து வருகிறது. இதனால், எலுமிச்சை பயன்பாடு அதிகரித்துள்ளது.

ஆனால், விளைச்சல் குறைந்து சந்தைக்கு வரத்து சரிந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்திற்கு ஆந்திர மாநிலம் குப்பம், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து, எலுமிச்சை கொண்டு வரப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில், ஒரு கிலோ ரூ.80க்கு விற்பனையான நிலையில், மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ரூ.150 வரை உயர்ந்தது. நேற்று மேலும் விலை உயர்ந்து, உழவர் சந்தையில் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.198க்கு விற்பனையானது.