அரூர், மே 25: மொரப்பூர் அருகே சாலையோர பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து 14 பேர் காயமடைந்தனர். தர்மபுரியில் இருந்து அரூர் நோக்கி, நேற்று முன்தினம் இரவு 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டு சென்றது. மொரப்பூர் அடுத்த சென்னம்பட்டி அருகே உள்ள வளைவில் சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதனால், பயணிகள் கூச்சலிட்டனர். அப்போது, எதிர்பாராத விதமாக சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்த பயணிகளின் கூச்சலிட்டனர்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, காயமடைந்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், 14 பேருக்கு சிகிச்சை பெறும் நிலையிலான காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த 4 பேர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து, மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
