Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விவசாய நிலங்களில் யானைகள் நடமாட்டம்

பென்னாகரம், ஜன.20: ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் யானைகள் நடமாட்டம் உள்ளதால், வனத்துறையினர் பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்கள் விநியோகித்து எச்சரிக்கை செய்தனர். தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் மற்றும் பென்னாகரம் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில், காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் ஒகேனக்கல் வனத்துறை சார்பில், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் யானைகள் நடமாட்டம் தென்பட்டால், உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும். பொதுமக்கள், இளைஞர்கள் யாரும் தாமாகவே யானை விரட்ட முயற்சிக்கக் கூடாது.

யானையை தொந்தரவு செய்தல், போட்டோ எடுத்தல் கூடாது. காட்டு யானைகளை விரட்டும் பணியில், உள்ள வனத்துறையினர் கூறும் நடைமுறைகளை கடைப்பிடித்து வனத்துறை பணியாளர்களுடன் இணைந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்ட ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்கள் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில், மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை வயல்வெளிக்கோ, வனத்தையொட்டி அருகில் உள்ள பகுதிக்கோ எக்காரணத்தைக் கொண்டும் செல்லக்கூடாது. வீட்டிற்கு வெளியே குடிசை போன்ற இடங்களில் இரவில் தூங்கக் கூடாது. யானைகளால் பயிர் சேதம் ஏற்பட்டால், வனச்சரகத்திற்கு தகவல் தெரிவித்து, உரிய ஆவணங்களுடன் மனு அளித்தால் நிவாரணம் அரசால் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வழிமுறைகள் விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஒகேனக்கல் வனத்துறை அலுவலர் சிவகுமார், தலைமையிலான வனக் குழுவினர் ஒன்றிணைந்து மடம், அரண்மனை பள்ளம், பண்ணப்பட்டி, ஊட்டமலை, ஒகேனக்கல், கூத்தப்பாடி, பூதிப்பட்டி, ஜக்கம்பட்டி, அம்மாபள்ளம் உள்ளிட்ட கிராம மக்களுக்கும், விவசாயிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.