தர்மபுரி, ஜன.20: தர்மபுரி மாவட்டத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.11.18 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆனது. இது கடந்த ஆண்டை விட குறைவு என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், அரசு மதுபான கடைகள் 66 செயல்பட்டு வருகின்றன. இதில் தர்மபுரி நகரில் 7 மதுக்கடைகளும், கிராமப்புறங்களில் 59 கடைகளும் உள்ளன. ஒரு சில கடைகளில் மட்டும், பார்கள் இணைக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளில் தினசரி சராசரியாக சுமார் ரூ.2.20 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகிறது. தீபாவளி, பொங்கல் பண்டிகை உள்ளிட்ட விசேஷ காலங்களில் கூடுதலாக மது விற்பனை நடக்கிறது.
அதே போல், நடந்து முடிந்த தீபாவளி பண்டிகை அன்று மட்டும் ரூ.3.80 கோடிக்கு பிராந்தி மற்றும் பீர், ரம் உள்ளிட்ட மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. மாவட்டத்தில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 14ம் தேதி போகி பண்டிகை அன்று ரூ.3.18 கோடிக்கும், 15ம் தேதி பொங்கல் நாளில் ரூ.3.80 கோடிக்கும், 17ம் தேதி காணும் பொங்கல் அன்று ரூ.4.20 கோடிக்கும் என மூன்று நாட்களில் மட்டும் ரூ.11.18 கோடி மது விற்பனை ஆகியுள்ளன. அனைத்து கடைகளிலும், குடிமகன்கள் வரிசையில் நின்று காத்திருந்து வாங்கி சென்றனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு மதுபான விற்பனை சரிந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

