சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் புகுந்த பாம்பு
தர்மபுரி, டிச.9: தர்மபுரி டவுன் குமாரசாமிபேட்டை சிவசுப்ரமணியசுவாமி கோயிலில், நேற்று ருத்ராபிஷேக பூஜைகள் நடந்தது. இதற்கான முன்னேற்பாடுகளை நேற்று காலை சிவனடியார்கள் செய்து கொண்டிருந்தனர். அப்போது கோபுரத்தின் உச்சியில் இருந்து, 3 அடி நீளமுள்ள பாம்பு பூஜை நடக்கும் இடம் அருகே விழுந்தது. இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் முருகன், தர்மபுரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதன் பேரில் நிலைய சிறப்பு அலுவலர் முரளி மற்றும் குழுவினர் பாம்பு பிடிக்கும் கருவிகளுடன் கோயிலுக்கு சென்றனர். அங்கு கோயில் உண்டியல் பின்புறம் பதுங்கி இருந்த 3 அடி நீளமுள்ள பாம்பை கருவி மூலம் பிடித்தனர். இது கொம்பேறி மூக்கன் வகை எனவும், அதிக விஷம் உள்ள பாம்பு எனவும் தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். இந்த பாம்பை தீயணைப்புத்துறையினர் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து கோயில் வளாகத்தில் ருத்ராபிஷேக பூஜைகள் நடந்தது.