தர்மபுரி, ஜன.10: பென்னாகரம் நாகனம்பட்டியை சேர்ந்தவர் குமார்(46). இவர் குடும்பத்துடன் பெங்களூருவில் தங்கி கூழ், மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட சீசன் வியாபாரம் செய்து வந்துள்ளார். சமீபத்தில் பென்னாகரத்தில் வசிக்கும் தனது மகள் வீட்டு விசேஷத்துக்கு, குமார் குடும்பத்துடன் வந்திருந்தார். நேற்று முன்தினம், வீட்டில் இருந்து மருமகனின் பைக்கில் மளிகை கடைக்கு சென்றுள்ளார். பென்னாகரம்-நாகனம்பட்டி ரோடு விநாயகர் கோயில் அருகே சென்ற போது, அவ்வழியாக வந்த மற்றொரு டூவீலர், குமார் வந்த பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட குமார் பலத்த காயமடைந்தார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement


