தர்மபுரி, பிப்.4: தர்மபுரி மாவட்டம் முக்கல்நாயக்கனஹள்ளியில் மண்வள வேளாண்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, அதியமான் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி சார்பில் நடந்தது. கல்லூரியின் முதல்வரும் மண்ணியல் விஞ்ஞானியுமான சாந்தி தலைமை வகித்தது, வளமான மண் தாவர வாழ்வின் ஆதாரமாகும். மண்ணின் வளத்தை பாதுகாத்தல் மனித இனத்தின் முக்கிய கடமையாகும். நம் நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக 8 முதல் 10 மில்லியன் டன் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் மண்ணில் இருந்து சுரண்டப்படுகிறது. இந்திய வேளாண்மையில் 50 ஆண்டுகளில் நவீன வேளாண் தொழில் நுட்பங்கள் மூலம் உணவு உற்பத்தியானது மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து உயர்ந்த விளைச்சலை பெறுவதற்காக தீவிர வேளாண்மை செய்வதால், ஒரு குறிப்பிட்ட நிலத்திலிருந்து பயிர்கள் எடுத்துக்கொள்ளும் ஊட்ட சத்துக்களின் அளவும் அதிகரித்து கொண்டு வருகிறது. அங்கக உரங்களை பயன்படுத்தாமை அல்லது குறைத்து பயன்படுத்துதல், பயிர் கழிவுகளை போதுமான அளவில் மறுசுழற்சி செய்யாமல் இருப்பது ஆகியவை மண்ணில் ஊட்டச்சத்து பற்றாக் குறையை பெருமளவில் ஏற்படுத்தும் என விவசாயிகளுக்கு தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் அழகு செடிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவிகள், விவசாயிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

