தர்மபுரி, அக்.2: தர்மபுரி நகராட்சி அன்னசாரகத்தில் இருந்து எர்ரங்காட்டு கொட்டாய், எட்டிமரத்துப்பட்டி, ரெட்டியூர் வழியாக வத்தல்மலைக்கு செல்லும் சாலை வழியாக 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள், ஆட்டோக்கள், விவசாய டிராக்டர்கள் என சாலையை பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக நகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக, சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. இதனால் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
இந்த பள்ளங்களில் சமீபத்தில் பெய்த கனமழைக்கு, தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. தண்ணீர் பள்ளத்தை முழுமையாக மூடிய நிலையில் உள்ளதால், வாகன போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் சாலை உள்ளது. புதிதாக இந்த சாலையில் வருபவர்கள் தண்ணீர் தேங்கிய பள்ளத்தில் டூ வீலரை வீட்டு, விழுந்து அடிபட்டு வருகின்றனர். எனவே, பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.


