தர்மபுரி, நவ. 2: தர்மபுரி நகர நரசய்யர் குளத்தை சுற்றி செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்து புதர் மண்டி, பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அதனை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி நகராட்சி 17வது வார்டு கந்தசாமி வாத்தியார் தெருவில், நரசய்யர் குளம் உள்ளது. நகரின் மையப்பகுதியில் உள்ள இக்குளத்தை சுற்றி, 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு 2,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நகராட்சி அலுவலகத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள இந்த குளத்தில் தண்ணீர் தேங்கி நின்றால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்படும். கோடைக்காலத்தில் இப்பகுதியில் தண்ணீர் பிரச்னை ஏற்படாது.
சமீபகாலமாக நரசய்யர்குளத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கின்றன. இதனால் கொசு உற்பத்தி ஆகும் இடமாக மாறி, தொற்று நோய் பரவும் இடமாகவும் மாறியுள்ளது. மேலும் குளத்தில் இருந்து வெளியேறி பாம்புகள் வீடு, தெருக்களில் படையெடுக்கின்றன. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், `நூற்றாண்டை கண்ட நரசய்யர் குளத்தை சுற்றி செடி,கொடிகள் என புதர் மண்டியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தி ஆகும் கேந்திரமாக மாறியுள்ளது. கொசுவினால் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. வீடுகளுக்கு வரும் நிலை உள்ளது. எனவே குளத்தை சுற்றிலும் ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகள் புதர்களை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும். மரச்செடிகள் வைத்து அழகுபடுத்த வேண்டும்,’ என்றனர்.


