தண்டுகாரம்பட்டியில் நெடுஞ்சாலையோர பள்ளத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை
நல்லம்பள்ளி, ஜூலை 31: தண்டுகாரம்பட்டி அருகே விபத்துகளை தடுக்க, நெடுஞ்சாலையோரம் உள்ள பள்ளத்திற்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள கெங்களாபுரத்தில் இருந்து, ஏலகிரி செல்லும் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையை தண்டுகாரம்பட்டி, ஏலகிரி, சாமிசெட்டிபட்டி, கெட்டுப்பட்டி, ஜருகு போன்ற பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், அரசு, தனியார் பேருந்துகள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில், மேட்டுக்கொட்டாய் பகுதியில் இருந்து தண்டுகாரம்பட்டி வரை உள்ள சாலையில், இரண்டு பகுதிகளும், சுமார் 5 முதல் 10 அடி ஆளம் கொண்ட வரை பள்ளங்கள் உள்ளது.
அதிக வளைவுகள் உள்ள இடத்தில் பள்ளங்கள் இருப்பதால், வாகனங்கள் வளையும்போது எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்குகின்றனர். இரண்டுக்கு மேற்பட்ட ஆட்டோக்கள் மற்றும் பல டூவீலர்கள் பள்ளத்தில் கவிழ்ந்து சிக்கியுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், பல பேர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். உயிரிழப்பு ஏற்படும் முன்பாக சாலையோரம் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




