தர்மபுரி, ஜூலை 31: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வனச்சரக அலுவலகங்களில் தேக்கு, மலைவேம்பு, மகாகனி, சந்தனம், செம்மரம், வேம்பு உள்ளிட்ட 3 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய தயார் நிலையில் உள்ளது. விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட வனப்பகுதியில், கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி, பல லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆனால், எதிர்பார்த்த அளவு வடகிழக்கு பருவமழை பெய்யாததால், வனத்தில் உள்ள குளம், குட்டை, தடுப்பணை உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டன. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, மரக்கன்றுகள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டது. வனத்துறையினர் தண்ணீரை விலைக்கு வாங்கி செடிகளுக்கு ஊற்றி காப்பாற்றினர். அப்படி இருந்தும் சில இடங்களில் செடிகள் காய்ந்து விட்டன.
தர்மபுரி மாவட்ட வனத்துறையில், காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர் பன்மை பாதுகாப்பு திட்டம் மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம் தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல், அரூர், கோட்டப்பட்டி, தீர்த்தமலை சமூக காடுகள் வனச்சரகங்கள் மற்றும் அரூர் வன விரிவாக்க மையம் போன்ற சரகங்கள் மூலம், 3 லட்சம் தேக்கு, மலைவேம்பு, மகாகனி, சந்தனம், செம்மரம், வேம்பு மற்றும் சில்வர் ஓக் போன்ற மரக்கன்றுகள் நடவு செய்வதற்கு அனைத்து நர்சரிகளிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மரக்கன்றுகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும், வேளாண் காடுகள் வளர்க்கும் திட்டத்தின் மூலம் இலவசமாக நடவு செய்து தரப்படும். மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் அருகில் உள்ள வனச்சரக அலுவலகங்களில் தொடர்பு கொள்ளலாம் என்று, தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி தர்மபுரி மாவட்ட வனத்துறையினர் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் 38 சதவீதம் வனப்பகுதியாக உள்ளது. 1930ம் ஆண்டில் தர்மபுரி மாவட்ட வனப்பகுதிகள் பசுமையாக, ஒளி கூட வனப்பகுதிக்குள் ஊடுருவ முடியாதபடி பசுமையாக அடர்ந்த காடாக இருந்துள்ளது. மக்கள் வனப்பகுதிக்குள் செல்ல தொடங்கிய பின்னர், படிப்படியாக காடுகள் அழிக்கப்பட்டு, வனத்தின் அடர்த்தி குறைந்து விட்டது. ஆடு, மாடு மேய்ச்சலுக்கும், விறகு, மரம் வெட்டுவதற்கும் சென்றதால், மரங்களின் அடர்த்தி குறைந்து விட்டது. பழையபடி பசுமை போர்த்திய காடாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை கால கட்டத்தில், நடவு செய்வதற்கு 3 லட்சம் மரக்கன்றுகள் தயாராக உள்ளது. விவசாயிகள் சிட்டா நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் உள்ளிட்ட ஆவணங்கள் காண்பித்து, மரக்கன்றுகளை இலவசமாக வாங்கி செல்லலாம்,’ என்றனர்.
மரங்கள் நமக்கு தூய்மையான காற்றை தருகிறது
மழையை பெறவும், வெப்பத்தை குறைக்கவும் மரங்கள் உதவுகின்றன. நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, செயற்கையான காலநிலை மாற்றம் தடுக்கப்படுகிறது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மரங்களின் அவசியத்தை நாடகங்கள், பாடல்கள் மற்றும் பேரணிகள் மூலம் கற்பித்தல் வேண்டும். பொதுமக்களை ஒன்றிணைத்து மரக்கன்று நடும் திருவிழாக்களை நடத்துதல் வேண்டும். வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்பது, சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும். மேலும், இடவசதி உள்ளவர்கள் முருங்கை, கறிவேப்பிலை, நெல்லி போன்ற பயனுள்ள மரங்களை வீட்டில் வளர்க்கலாம். மரங்களின் நிழல் வீட்டை சுற்றியுள்ள வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியாக இருக்க உதவும்.



