தர்மபுரி, ஜூலை 30: தர்மபுரி மதிகோண்பாளையம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம், ராகி கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வரும் ஒரு கிலோ ராகிக்கு, ரூ.1 அலுவலர்கள் கட்டாயமாக வசூலிப்பதாகவும், 50 கிலோ கொண்ட ராகி மூட்டையாக கொண்டு வந்தால் மட்டுமே, விவசாயிகளிடம் ராகி கொள்முதல் செய்யப்படுவதாக, கலெக்டர் அலுலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். இந்த புகாரை தொடர்ந்து, நேற்று கலெக்டர் சரசவணன், ராகி கொள்முதல் நிலையத்தை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, கொள்முதல் செய்யப்படும் ராகியின் தரம், விதிமுறைக்கு உட்பட்டு இருக்க வேண்டும். விவசாயிகளிடம் இருந்து எந்த ஒரு புகாரும் எழாத வண்ணம், ராகியை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என பணியாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இதையடுத்து, தர்மபுரி வட்ட செயல்முறை கிடங்கை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு, பொது விநியோகத் திட்டத்திற்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தரமாகவும், பூச்சித்தாக்கமின்றியும், சரியான எடையிலும் அந்தந்த மாதத்திற்குரிய வண்ண நூலிட்டு, ரேஷன் கடைகளுக்கும், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், முதல்வரின் காலை உணவுத் திட்டம், விடுதிகள், அம்மா உணவகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அனுப்ப வேண்டும் என கிடங்கு பொறுப்பாளருக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும், கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களின் அட்டியின் உயரத்தை 24 அடி உயரம் வரை உயர்த்தி, மூட்டைகள் அட்டியிட்டு பராமரிக்க வேண்டும். கிடங்கினை சுகாதாரமாகவும், தூய்மையாகவும் பராமரிக்க கிடங்கு பொறுப்பாளருக்கு கலெக்டர் சரவணன் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளர் துரைசாமி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.



